நகைச்சுவை: சிவாஜி - விடுபட்ட காட்சிகள்


சூப்பர் ஸ்டாரின் சிவாஜி படத்தை பார்த்திருப்பீர்கள். அதில் வரும் ஒவ்வொரு காட்சியையும் அதிரடியாகவும், விறுவிறுப்பாகவும் அமைத்திருப்பார் இயக்குனர் ஷங்கர். இருந்தாலும் சிவாஜியின் வாழ்க்கையில் அவை மட்டுமா நடந்திருக்கும்? காலையில் பால்காரன் சிவாஜியின் வீட்டில் பால் போடுவதிலிருந்து தொடங்கி இன்னும் பல சாதாரண விஷயங்கள் நடந்திருக்கும். அவைகளெல்லாம் சேர்த்தால் படத்தின் விறுவிறுப்பு குறைந்து விடும் என்று இயக்குனர் விட்டுவிட்டிருப்பார். 

நாம் சும்மா இருப்போமா? ஏவிஎம்மின் லேபுக்கு சென்று அவ்வாறு விட்டுப்போன காட்சிகளில் சிலவற்றை, நமது வாசகர்களுக்காக சுட்டு (கற்பனையில்தான்) வந்துள்ளோம்.


காட்சி 1:(சிவாஜி கார் பைட் முடிந்து காரை மெக்கானிக்கிடம் கொண்டு செல்கிறார்)
சிவாஜியின் கார் மெக்கானிக்: அண்ணே! நீங்க பாட்டுக்கும் வாரத்துக்கு ஒரு தடவையாச்சும் சுலபமா கார் சேஸிங், ஃபைட்டு, கியிட்டுன்னு வில்லன்களை உங்க காராலே விளாசிட்டு, உங்க உடைஞ்ச காரை என் வொர்க் ஷாப்ல விட்டுட்டு போயிடறீங்க. அதை ரிப்பேர் பார்த்து, டிங்கரிங் பண்ணி, பஞ்சர் பாத்து, பெண்டெல்லாம் நிமித்தரத்துக்குள்ள என் பெண்டு கழண்டுடுது. பேசாமா ஒரு புல்டோசர் வாங்கிக்கோங்கண்ணே!


காட்சி 2:(சிவாஜி தன் ஆபீஸ் ரூமிலிருந்து வெளியே வந்து அங்கு அமர்ந்திருக்கும் ரிசெப்ஷனிஸ்டிடம் கேட்கிறார்)
சிவாஜி: ஏம்மா. பக்கத்து ஊரு பஞ்சாயத்து தலைவர் வந்தா என் ஆபீஸ் ரூமுக்கு அனுப்ப சொன்னேனே, அவரு வந்தாராம்மா?
ரிசெப்ஷனிஸ்ட் பெண்: அய்யய்யோ. நீங்க உங்க நிஜ ஆபீஸ் ரூமுக்கா அனுப்ப சொன்னீங்க? நாங்க தவறுதலா அவரை 'அந்த' ஆபீஸ் ரூமுக்கு அனுப்பிட்டோம் சார். அவரும் என்ன ஏதுன்னு புரியாமலே ஃபுல் தர்ம அடி வாங்கிட்டு அப்பவே கிளம்பி போயிட்டாரே சார்.


காட்சி 3:(இடம்: சிவாஜி யூனிவெர்சிட்டி - யூனிவெர்சிட்டிக்கு வந்திருக்கும் அப்ளிகேஷன்களை பார்த்துக்கொண்டே சிவாஜி தன் அம்மாவின் தம்பியிடம் பேசுகிறார்)
சிவாஜி: டேய் மாமா. நீ பாட்டுக்கும் நேத்து திடல்ல, அத்தனை கூட்டத்துக்கு மத்தியில, சிவாஜி - தி பேச்சுலர் ஆஃப் சோஷியல் சர்வீஸ்னு பந்தாவா சொல்லிட்டு வந்துட்டே. இப்ப பாரு. பேச்சுலர் ஆஃப் சோஷியல் சர்வீஸ் படிக்கனும்னு நம்ப யூனிவெர்சிட்டிக்கு ஐம்பது அப்ளிகேஷன் வந்திருக்கு!


காட்சி 4:(சிவாஜியின் மனைவி துணிகளை மடித்துக்கொண்டே..)
மனைவி: என்னங்க! ஃபோன்ல 'பாஸ் பேசறேன்னு' நீங்க உங்க எதிரிங்க கிட்ட அதிரடியா பேசும்போது ஸ்டைலாகத்தான் இருக்கு. அதுக்காக உங்க லெதர் ஜாக்கெட் காலரை கடிச்சிகிட்டா பேசறது? தோ பாருங்க. வாங்கி கொடுத்த எட்டு லெதர் ஜாக்கெட் காலர்லேயும் ஓட்டை போட்டு வைச்சிருக்கீங்க.


காட்சி 5:(இடம்: சிவாஜியின் ஆபீஸ் அறை. உள்ளே சிவாஜி அமர்ந்திருக்க, அவசர அவசரமாய் உள்ளே நுழைகிறார் சிவாஜியின் மாமா, அதாவது சிவாஜியின் அம்மாவின் தம்பி)
மாமா: சிவாஜி. நாளைக்கு நாம்ப பக்கத்து ஊரு அரசியல்வாதியுடைய கருப்பு பணத்தை எடுக்கலாம்னு இருந்தோமே. அந்த பிளான் கான்ஸல்.
சிவாஜி: ஏன்! என்னாச்சுடா மாமா?
மாமா: அந்த அரசியல்வாதியை நேத்து யாரோ 'அந்நியன்'ங்கிற பேருல ஒருத்தன் வந்து கொன்னுட்டு போயிட்டானாம்.


காட்சி 6:(இடம்: வில்லன் ஆதி, அண்ணா சாலை சிக்னலில் தன் காரில் அமர்ந்திருக்கின்றார். அப்போது ஒரு பிச்சைக்காரர் வருகிறார்)
பிச்சைக்காரர்: அய்யா! சாமி! ஏதாச்சம் தர்மம் பண்ணுங்கய்யா..
ஆதி: யோவ். தள்ளிப்போய்யா. ஏற்கெனவே ஒருத்தனுக்கு ஒரு ரூபாய் போட்டுட்டு நான் படற அவஸ்தை போதாதா! இவன் வேற..

Written on 07/12/2007
By Sampath
www.facebook.com/TamilStories

Comments