சப்-இன்ஸ்பெக்டர் சந்தானத்தின் கடிதங்கள் - கடிதம் 1

அன்புள்ள காவல்துறை தலைவருக்கு,

தங்களிடம் உண்மையான பணிவும், மரியாதையும் வைத்திருக்கும் சப்-இன்ஸ்பெக்டர் சந்தானம் எழுதிக்கொள்வது.

இங்கு எனது ஸ்டேஷனில் இருக்கும் அனைத்து காவலர்களும், ஸ்டேஷன் ஜெயிலில் இருக்கும் அனைத்து கைதிகளும் நலம். அதுபோல தங்களின் நலனையும், தங்களின் கட்டுப்பாட்டிலுள்ள காவலர்கள் மற்றும் சென்டிரல் ஜெயில் கைதிகளின் நலனையும் அறிய ஆவல்.

அய்யா! தாங்கள் என் மீது மிகவும் கோபமாயிருக்கிறீர்கள் என்று கேள்விபட்டேன். தங்களின் கோபம் நியாயமானதுதான். ஆனால், உண்மையை முழுக்க நீங்கள் தெரிந்துக்கொண்டால் அவ்வாறு கோபப் படமாட்டீர்கள். அதுவும் என் மீது! இப்போது விஷயத்துக்கு வருகிறேன்.
தமிழகத்தில் பல திருட்டுகளை நடத்தி, போலீஸ் துறைக்கே பெரும் சவாலாக இருந்தவன் கேடி தண்ணீர்மலை என்பது அனைவருக்கும் தெரியும். அப்பேற்பட்டவனை தாங்கள் அரும்பெரும் தீரச்செயல்கள் புரிந்து, சமீபத்தில் சிறையில், அதுவும் எனது கட்டுபாட்டிலிருக்கும் ஸ்டேஷன் சிறையில் அடைத்தீர்கள் என்கிற நல்ல செய்தியையும் மக்கள் அறிவார்கள்.

ஆனாலும் அவன் முந்தாநாள் சிறையிலிருந்து தப்பிவிட்டான் என்ற செய்தி, எனக்கு அப்போது கிடைத்த போது எனக்கே நெஞ்சு வெடித்துவிடும் போலிருந்தது. எனக்கே அப்படியென்றால், அவனை கஷ்டபட்டு பிடித்த தங்களுக்கு எப்படி இருந்திருக்கும்? மேலும், என்னுடைய அஜாக்கிரதையால்தான் அவன் தப்பிவிட்டான் என்று தாங்கள் என்ணிவிட்டதை கேள்வி பட்டதும், ஏற்கெனவே வெடித்துவிடும் போலிருந்த என்னுடைய நெஞ்சு பிளந்தே போனது. அதனால் தான் உடனே நான் மெடிக்கல் லீவில் சென்றுவிட்டேன். இதுதான் நான் மெடிக்கல் லீவ் போட்டதற்கான உண்மையான காரணம் என்பதை நீங்கள் அறிவீர்கள். மற்றவர்கள் இதை 'நடிப்பு' என்று சொன்னாலும் தாங்கள் நம்ப மாட்டீர்கள் என்று எனக்கு தெரியும்.

மேலும் நான் 'மற்றவர்கள்' என்று யாரை குறிப்பிடுகின்றேன் என்பது தங்களுக்கே மிக நன்றாக தெரியும். ஆம்! நான் அவ்வாறு குறிப்பிடுவது தாங்கள் அனுப்பிய அந்த மூன்று விசாரணை அதிகாரிகளைத்தான். அவர்கள் கேடி தண்ணீர்மலையை விசாரிப்பதற்காக வந்தவர்கள் மாதிரியே நடந்து கொள்ளவில்லை. அதை விட என்மேல் குற்றம் கண்டுபிடிப்பதிலேயே குறியாக இருந்தார்கள். வேலை நேரத்தில் நான் சொந்த வேலையாக அடிக்கடி வெளியே செல்வதாகவும், ஸ்டேஷனில் இருக்கும் டிபார்ட்மெண்ட் ஜீப்புகளை நான் சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்திக் கொள்பதாகவும், மேலும் அந்த ஜீப்புகளை சரியாக பராமரிக்காமலிருப்பதாகவும், எதிலும் அஜாக்கிரதையாக இருப்பதாகவும் தங்களிடம் கூறியிருக்கிறார்கள் என்று அறிகிறேன். இவற்றையெல்லாம் தாங்கள் நம்ப மாட்டீர்கள் என்று எனக்கு நிச்சயமாக தெரியும். இருந்தும் இவற்றுக்கெல்லாம் நான் விளக்கம் அளிக்க விரும்புகின்றேன்.

ஐயா, ஒரு காவல்காரன் என்பவன் தினமும் ஜிம்முக்கு போக வேண்டும் என்று தாங்கள் தான் அடிக்கடி சொல்வீர்கள். அதை நான் வேதவாக்காக எடுத்துகொண்டு செயல்படுகின்றேன் என்பது என் ஸ்டேஷனில் உள்ள அனைவருக்கும் தெரியும். ஏனோ, அது இந்த மூன்று விசாரணை அதிகாரிகளின் கண்களை உறுத்துகிறது. கேட்டால் நான் ஆபீஸ் நேரத்தில், சொந்த வேலையாக ஜிம்முக்கு போகிறேனாம்.

ஐயா, காலையில் எழுந்து ஜிம்முக்கு போனால் தூக்கம் கெட்டுவிடும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. அதனால் தான் நான் மதியம் சாப்பாட்டிற்கப்புறம் செல்கிறேன். இதை தவறு என்று நீங்கள் கருத மாட்டீர்கள் என்று எனக்கு தெரியும். ஆனாலும் நான் எனது செயலை மேலும் விளக்கித்தான் ஆகவெண்டும்.

ஐயா, எங்கள் ஊரில் ஒரு அல்டிரா-மாடர்ன் ஜிம் இருப்பது உங்களுக்கு தெரிந்த விஷயம். அங்கு கிடைக்கும் மஸாஜ் மிகவும் பிரபலம். மதியம் சாப்பாட்டிற்கு பிறகு அங்கு போய் சுமார் ஒரு முக்கால் மணி நேரம் மஸாஜ் செய்து கொண்டோமானால்..ஆஹா..ரொம்ப பிரமாதமாக, அவ்வளவு அற்புதமாக இருக்கும். சாப்பிட்ட களைப்பே தெரியாது. (அடுத்த தடவை நீங்கள் வந்தால் உங்களையும் கூட்டிச்செல்கிறேன், மேலும் போலீஸ்காரர்களிடம் அவர்கள் காசு வாங்குவதில்லை என்பது மற்றொரு இன்பமான செய்தி).

இவ்வாறு மஸாஜ் செய்து கொண்டதற்கப்புறம், கண்ணை சுழற்றி கொண்டு ஒரு தூக்கம் வரும் பாருங்களேன், மிக ஆனந்தமாக இருக்கும். நானே சில சமயம் தூங்கிவிடுவேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். இவ்வாறு, மிகுந்த சுயகட்டுப்பாடுள்ள நானே தூங்கும் போது என் கூடவே வரும் ஏட்டுவும், ஹெட்-கான்ஸ்டபிளும் தூங்கிப்போவதில் வியப்பு ஒன்றுமில்லை அல்லவா?

ஆனாலும் வேலை நேரத்தில் தூங்குவது தவறு என்ற கொள்கையுடையவன் நான் என்பது உங்களுக்கு தெரியும். ஆதலால் நான் அவர்களை அதிக நேரம் தூங்க விடுவது இல்லை. வெறும் ஒரு மணி நேரத்தில் அவர்களை எழுப்பி அனுப்பிவிடுவேன். என்ன இருந்தாலும் கடமை முக்கியமல்லவா? ஆதலால் அவர்கள் சென்ற சில மணிநேரத்திற்குள் நானும் ஸ்டேஷனுக்குப் போய் சேர்ந்துவிடுவேன். இந்த கடமை உணர்ச்சியை பாராட்டும் பக்குவம், நீங்கள் அனுப்பிய அந்த மூன்று அதிகாரிகளுக்கில்லை. உங்களுக்கு கண்டிப்பாக இருக்குமென்பது எனக்கு தெரியும்.

இவ்வாறு, இரண்டு நாளைக்கு முன், ஜிம்மிலிருந்து திரும்பி வரும் போது ஸ்டேஷனில் இருந்து ஒரே களேபரமான சத்தம் கேட்டது. பார்த்தால் அந்த மூன்று விசாரணை அதிகாரிகள் 'தாம்தூமென்று' கத்திக்கொண்டிருந்தார்கள். என்னவென்று விசாரித்ததில், அவர்கள் அப்போதுதான் ஸ்டேஷனுக்கு வந்து கொண்டிருந்ததாகவும், அப்போது கேடி தண்ணீர்மலை ஸ்டேஷனிலிருந்த இரு காவலர்களையும் தாக்கிவிட்டு, ஸ்டேஷனிலிருந்த ஒரு 'பைக்'கை திருடி அதில் தப்பித்து போய்கொண்டிப்பதை பார்த்ததாகவும் சொன்னார்கள்.
நான் கேட்டேன் "நீங்கள் உடனே உங்கள் ஜீப்பில் சென்று அவர்களை பிடிக்க வேண்டியது தானே?" (ஐயா, தாங்கள் கூறியபடி அவர்களுக்கு, எனது ஸ்டேஷனில் இருக்கும் இரு ஜீப்பில் ஒன்றை, டிரைவரோடு, முன்னமே கொடுத்துவிட்டிருந்தேன் என்பது தங்களுக்கு தெரியும்). இவ்வாறு நான் கேட்ட கேள்விக்கு அவர்கள் அளித்த பதில்தான் வினோதமாக இருந்தது.
அந்த ஜீப்பு மற்றும் அதன் டிரைவரையும் காலையிலிருந்து அவர்கள் பார்க்கவில்லை என்று சொன்னார்கள். மேலும் நான் தான் அந்த ஜீப்பை எனது சொந்த உபயோகத்திற்காக எங்கியாவது அனுப்பியிருக்க வேண்டுமென்று சந்தேகிப்பதாக என் மீது அபாண்டமாக பழி சுமத்தினார்கள். அப்போது தான் எனக்கு அன்று காலையில் நடந்ததொரு சம்பவம் நினைவுக்கு வந்தது.

"ஒரு காவல்காரன் என்பவன் பொதுமக்களின் நண்பனாக நடந்துக்கொள்ள வேண்டும்" என்று நீங்கள் தானே அடிக்கடி சொல்வீர்கள்! அதன்படியே அன்று காலை நான் செய்த ஒரு காரியத்தை கேட்டால் நீங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைவீர்கள்.

ஐயா, ஒரு கர்ப்பிணி பெண், அதுவும் ஏழுமாத கர்ப்பிணி பெண், நடக்க முடியாமல் நடந்து, பஸ் நிலையத்தை அடைந்து, அங்கிருந்து பஸ் மூலமாக இரண்டு மணி நேரம் பயணம் செய்து, தனது ஊருக்கு போக முற்பட்டால் யாருக்குத் தான் மனது பொறுக்கும்? நமது மனது துடித்துவிடாதா? அந்த மாதிரி போக முயன்ற ஒரு கர்ப்பிணி பெண்ணை நான் தான் தடுத்து நிறுத்தி, "அம்மா! கவலைபடாதே! நான் எங்கள் டிபார்ட்மெண்ட் ஜீப்பில் உன்னை பத்திரமாக அனுப்பிவைக்கிறேன்" என்று ஆறுதல் கூறி, நமது விசாரணை அதிகாரிகளுக்காக வைத்திருந்த ஜீப்பை அனுப்பி வைத்தேன்.

இவ்வாறாக ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு, ஏதோ நம்மால் முடிந்த ஒரு உதவி செய்ய முடிந்ததை கண்டு எனக்கு மகிழ்ச்சி ஏற்பட்டதில் வியப்பேதும் இல்லை அல்லவா! நீங்களும் இதை கேட்டதும் மகிழ்ச்சி அடைவீர்கள் என்பது எனக்கு தெரியும். மேலும் என்னுடைய சொந்த மச்சினி தான் அந்த கர்ப்பிணி பெண் என்று நான் கூறினால் நீங்கள் பெரும் மகிழ்ச்சியடைவீர்கள் என்பதும் எனக்கு தெரியும் (இந்த இடத்தில் இன்னொரு இன்பமான தவலை கூற விரும்புகிறேன். உலகத்திலேயே மிகுந்த சுவையுள்ள வாழக்காய் பஜ்ஜிகளை செய்வது எனது மச்சினி தான் என்று என் மனைவி வீட்டில் கூறுவார்கள். நானும் அதை பலமுறை உண்மை என்று உணர்ந்திருக்கிறேன். அப்பேற்பட்டவள் அடுத்த தடவை தாங்கள் இங்கு வரும்போது தங்களுக்காகவே ஒரு தூக்கு நிறைய பஜ்ஜிகளை செய்துதர ஒப்புகொண்டிருக்கின்றாள் என்பதே அந்த இன்பமான விஷயம்)
சரி. இப்பொது விஷயத்துக்கு வருவோம்.

தங்களுடைய ஜீப்பு எங்கே போயிருக்கிறது என்பதை என் மூலமாகவே கேள்விபட்ட அந்த விசாரணை அதிகாரிகள் ஆச்சர்யத்தால் அதிர்ந்து போய்விட்டார்கள். சிறிதுநேரம் தங்களின் வாயையே திறக்கவில்லை. ஒருவேளை நான் இவ்வளவு உன்னதமான ஒரு செயலை செய்யமாட்டேன் என்று எண்ணியிருந்தார்கள் போலும் (மேலும், அவர்களுக்கு பஜ்ஜிகள் செய்துதர எனது மச்சினி ஒத்துக்கொள்ளமாட்டாள் என்பதால், அவள்தான் அந்த கர்ப்பிணி பெண் என்கிற விஷயத்தை நான் அவர்களிடம் சொல்லவில்லை).

ஆனாலும் அவர்கள் என்னைப் பற்றி உங்களிடம் இல்லாதது பொல்லாததை சொல்லியிருப்பதாக அறிந்தேன். அதையெல்லாம் நீங்கள் நம்ப மாட்டீர்கள் என்று எனக்கு தெரியும். இருந்தாலும் நான் தன்னிலை விளக்கம் கூறவே இந்த கடிதத்தை அனுப்புகிறேன். மேலும் கேடி தண்ணீர்மலை பக்கத்தில் உள்ள மலைக்காட்டில் பதுங்கியிருப்பதாக தெறிகிறது.
இக்கடிதம் உங்களுக்கு கிடைக்கும் போது, நானே தண்ணீர்மலையைத் தேடி, ஒரு போலீஸ் படையுடன் அக்காட்டிற்குள் சென்றிருப்பேன்.

ஆனாலும் நீங்கள் கேட்கலாம், 'தண்ணீர்மலையை உடனே ஏன் பின் தொடர்ந்து காட்டிற்கு செல்லவில்லை என்று'. அதற்கு நான் தக்க பதிலை கூற கடைமை பட்டுள்ளேன்.
'ஐயா! இப்போதெல்லாம் எனக்கு ஹோட்டல் சாப்பாடு ஒத்துக்கொள்வதில்லை. ஹோட்டல் சாப்பாடே ஒத்துக்கொள்ளாதவனுக்கு காட்டு சாப்பாடு எப்படி ஒத்துக்கொள்ளும். அதனால்தான் நான் என் சொந்த ஊரிலிருந்து எனக்கு நன்கு அறிமுகமானா சமையல்காரர்களை சேர்த்து ஒரு டீமை அஸெம்பிள் பண்ணினேன். அதில் பாருங்கள், இந்த பிரியாணி பண்ணுபவன் ரொம்பவே 'வரமாட்டேன் என்று' பிடிவாதம் பிடித்தான். அவனுடைய நாட்டுபற்று அவ்வளவுதான். ஆனாலும் அவனை விட முடியுமா? என்ன இருந்தாலும், பிரியாணி என்பது எனக்கும், ஏட்டுவுக்கும், ஹெட் கான்ஸ்டபிளுக்கும் பிடித்தமான ஒன்று என்பதை என் ஸ்டேஷனில் உள்ள அனைவரும், கைதிகள் உள்பட, அறிவார்கள். அதனால்தான் அவனை சமாதனப்படுத்தி கூட்டி வருவதற்கு சற்று நேரமாகிவிட்டது. இவ்வாறு சமையல்காரர்களை பார்த்து பார்த்து தேர்ந்தெடுக்கவே நேரம் நிறைய ஆகிவிட்டது. ஆனால் பாருங்கள், போலீஸ்காரர்கள் டீமை உடனே அஸெம்பிள் பண்ணிவிட்டேன் என்று சொன்னால் நீங்கள் என்னைப் பற்றி பெருமையாக நினைப்பீர்கள். நிலையத்தில் அப்போதிருந்த போலீஸ்காரர்களை 'சா பூ த்ரீ' போடவைத்து வைத்து உடனே ஒரு டீம் ·பார்ம் பண்ணிவிட்டேன்.

ஐயா, இக்கடிதத்தை உங்களுக்கு அனுப்புமாறு என் உதவியாளரிடம் பணித்து விட்டு, இதோ, நாங்கள் காட்டிற்கு கிளம்பிவிட்டோம்.

காட்டில் என்ன நடக்கிறது என்பதை நான் அடுத்த கடிதத்தில் தெரிவிற்கிறேன்.
இப்படிக்கு தங்கள் உண்மையுள்ள

சந்தானம்

Comments

  1. Anonymous5:41 PM

    Good one Sam! Captures the gist of what really happens in Tamil Nadu police stations in a humorous manner.

    This problem of the policemen spending the afternoon outside the sattion (!) is particularly worse in the southern parts of Tamilnadu.

    ReplyDelete
  2. Sam... Awsome... Nice comedy and still lot of yadartham...

    ReplyDelete
  3. Its very nice..plz continue this great job.

    ReplyDelete

Post a Comment