சிறுகதை : விசா

நாதன் அமர்ந்திருந்த பஸ் மெதுவாக மேம்பாலத்தில் ஏறியது. அவன் இறங்க வேண்டிய இடம் சற்று நேரத்தில் வந்துவிடும். தன்னுடைய செல்·போனை எடுத்து பார்த்தான். காலை 5:45 மணி என்று காட்டியது.

அவன் முகத்தில் ஒரு மெல்லிய கவலை ரேகை வந்து போனது.


'ஒரு வேளை தான் ரொம்ப லேட்டோ? இந்நேரம் பெரிய கியூ கூடியிருக்குமா?

தனக்கு விசா இண்டெர்வியூ கிடைக்குமா என்றெல்லாம் அவன் மனது படபடத்தது. அவ்வளவு கெடுபிடி அந்த தூதரகத்தில். விசா வேண்டி வருபவர்களின் எண்ணிக்கை மிக அதிகமென்பதால்தான் அப்படி.

மேம்பாலத்தில் இருந்து கீழே நோக்கினான். கீழே உள்ள சாலையில் அரக்க பரக்க வாகனங்கள் சென்று கொண்டிருந்தது. அந்தச் சாலையின் வலைவில் மிகப் பரந்து அமைந்திருந்தது அந்த தூதரகம்.

அதை ஒட்டி பெரிய சுவர் நீண்டிருந்தது. அந்த சுவற்றை சுற்றி பலத்த காவல் போடப் பட்டிருந்தது.

ஆனால் அந்த சுவர் ஓரமாய் ஒரு பெரிய கியூ நின்று கொண்டிருந்தது. அதைப் பார்ததுமே நாதனுக்கு 'சே' என்றாகிவிட்டது.

'இன்னைக்கு நமக்கு ஸ்லாட் கிடைச்ச மாதிரி தான்' என்று நினைத்துக் கொண்டான். சில நாட்களாக தூதரகத்தின் ஆன்லைன் புக்கிங் சிஸ்டம் டவுனாம். ஆதலால் அனைவரையும் நேரில் வரச்சொல்லிவிட்டார்கள்.
அவர்களுக்கென்ன? ஈஸியாக சொல்லிவிட்டார்கள். அடிச்சு பிடிச்சு காலையில் வந்து பார்த்தால் தானே அவர்களுக்கு புரியும்.

இன்று மூன்றாவது நாள். இரண்டு நாட்களாக கியூவில் நின்று இண்டெர்வியூ ஸ்லாட் கிடைக்காமல் திரும்பியிருக்கின்றான். ஆனாலும் என்ன செய்வது? வேலை விஷயமாச்சே. அருமையான வேலை. நல்ல சம்பளம். வேலை கொடுத்த கம்பெனி இவனுக்கு வொர்க் விசா டாக்குமெண்டை அனுப்பி விட்டார்கள்.

இவன் போய் அந்த விசா டாக்குமெண்டை தூதரகத்தில் கொடுத்து தூதரகத்தின் அனுமதியை இவன் பாஸ்போர்டில் ஸ்டாம்ப் செய்ய வேண்டும்.
அதற்குள் அந்த பஸ் மேம்பாலத்தை விட்டிறங்கி அந்த தூதரகத்திற்கான ஸ்டாப்பில் போய் நின்றது.

நாதன் இறங்கிப் போய் அந்த கியூவில் நின்றான். 'எப்படியாவது இன்று இண்டர்வியூ ஸ்லாட் கிடைக்க வேண்டும்'.

அன்று அவனுக்கு அதிர்ஷ்ட நாள் போலும். இண்டர்வியூவுக்கு ஸ்லாட் கிடைத்து விட்டது. இண்டர்வியூம் உடனே நடக்கப் போகிறது. கூட்டம் நிறைய என்பதால் அடிஷனலாக நிறைய ஆபீஸர்ஸை வரவழைத்திருந்தார்கள். எக்ஸ்டிரா கவுண்டர்கள் ஓபன் செய்திருந்தார்கள்.

மகிழ்ச்சியுடன் தூதரகத்தின் உள்ளே சென்றான். அவன் பெயர் கூப்பிடப் பட்டதும், தன்க்கு கொடுக்கப் பட்ட கவுண்டருக்கு சென்றான். உள்ளே செக்க செவேலென்று ஒரு தூதரக அதிகாரி சிரித்த முகத்துடன் அவனை வரவேற்றார்.

"மிஷ்டர் நாதன். நீங்கள் கொடுத்த அப்ளிகேஷனில் தேதியை தவறாக போட்டிருக்கிறீர்கள். வருடத்தின் கீழ் 2027 என்பதற்கு பதிலாக 2021 என்று போட்டிருக்கிறீர்கள். ஒன்றின் மேல் ஒரு கோடைப் போட்டு அதை ஏழாக ஆக்கித் தருகிறீர்களா? என்றார்.

"ஆ. சாரி சார். அப்ளிகேஷனை அவசர அவசரமாக ·பில் பண்ணும் போது கொஞ்சம் நெர்வஸ் ஆகிவிட்டேன். அதனால் தான் தவறு நேர்ந்துவிட்டது. மீண்டும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் சார்' என்றபடியே தன் அப்ளிகேஷனை திருத்திக் கொடுத்தான்.

"பரவாயில்லை. உங்கள் அப்ளிகேஷனை கம்ப்ளீட்டாக செக் பண்ணிப் பார்த்தேன். எங்கள் நாட்டிற்கு அனுமதிக்கும் அளவுக்கு உங்களுக்கு திறமை இருப்பதாக தெரிந்தது. அதனால் தான் உங்கள் அப்ளிகேஷனை ரிஜெக்ட் பண்ணாமல் உங்கள் மிஷ்டேக்கை சரி செய்ய கூப்பிட்டேன். ஆனாலும் ஒரு கேள்வி. நாதன் என்கிற உங்கள் பெயர் எங்கள் ஊரிலும் பலருக்கு வைப்பார்கள். உங்கள் ஊரில் நாதன் என்றால் என்ன அர்த்தம்"

"நாதன் என்றால் 'கடவுள் கொடுத்தது' என்று அர்த்தம் வரும். 'நாதன் த பிரா·பெட்' என்று ஒரு அறிஞர் பைபிளில் வருவார். அவரை குறிக்கும் பொருட்டு எனக்கு அந்த பெயர் வைக்கப்பட்டது. சரியாக சொல்ல வேண்டுமென்றால் எங்கள் ஊரில் நாதன் என்பதற்குப் பதிலாக நேதன் என்று கூறுவார்கள்' என்றான் நாதன் எனப்படும் நேதன் ஆண்டர்சன்.

"நன்றாக சொன்னீர்கள். எனிவே, உங்களுக்கு தகுந்த திறமைகள் இருப்பதால் உங்களை எங்கள் இந்திய நாட்டிற்கு செல்ல அனுமதி அளிக்கின்றேன்" என்றபடியே அப்ளிகேஷனில் கையெழுத்திட்டார், நியுயார்க்கில் இருக்கும் அந்த இந்தியத் தூதரகத்தின் அதிகாரி.

In Facebook : Visa - A short story

Comments