நகைச்சுவை: டவுசர்


ஏதாவது ஒரு ஃபங்ஷனில் நீங்கள் நோட் பண்ணியிருப்பீர்கள். குறிப்பாக பெண்களிடம் இந்த பழக்கம் உண்டு. அதாவது மற்றவர்கள் நல்ல உடையணிந்து வந்தால் அதை வாய்விட்டு அவர்களிடமே  தன் பாராட்டுகளை தெரிவிப்பது. 

கீழ்கண்ட கான்வெர்சேஷன்களை நீங்கள் கேட்டிருப்பீர்கள். 

‘மாமீ, உங்க சாரீ ரொம்ப அழகா இருக்கு. எங்கே வாங்கினீங்க?’   

‘ஹேய். உன் சுடிதார் சூப்பர்ப். எங்கே எடுத்தது?’ 

‘உங்க சாரீயோட கலர் அப்படியே உங்க ஸ்கின் கலருக்கு ரொம்ப அருமையா மேட்ச்சா இருக்கு’ 

ஆனால் மேற்கண்ட உரையாடல்களை நான் ஆண்களிடமிருந்து கேட்டதில்லை. 

‘ஹலோ சந்தானம். உங்க வேஷ்டி ரொம்ப வெள்ளையா, அப்படியே உங்க ஸ்கின் கலருக்கு டோட்டல் ஆப்போசிட்டா, ரொம்ப அழகாயிருக்கு’ போன்ற பாராட்டு வசனங்களை நான் கேட்டதில்லை.  

இப்படிபட்ட ஆண்வர்கத்தில் நானும் ஒருவன் என்பதால், இதுவரை நான் அணிந்த ஆடைகளை மற்ற எவரும் புகழ்ந்து கேட்டதில்லை. ஒருவேளை அப்படி புகழ்கிற மாதிரி ஆடைகள் அணிந்ததில்லையா என்றும் தெரியவில்லை.  

ஒருவேளை அப்படி புகழ்கிற மாதிரி ஆடையை அணிந்து, அதை ஒருவன் பாராட்டினால் எப்படியிருக்கும் என்ற ஒரு வாய்ப்பு சில நாட்கள் முன் வந்தது. 

அமெரிக்காவில் வசிக்கும் நான், சமீபத்தில் லீவுக்கு இந்தியாவுக்கு வந்தேன். வந்தவன் குடும்பம் மற்றும் உறவினர்களுடன் குற்றாலம் சென்றேன். 

குற்றாலத்தில் ஐந்தருவியில் குளிக்க முடிவெடுத்தோம். 

ஆண்களெல்லாம் மேலாடை களைந்து, கீழாடை மற்றுமே அணிந்து சென்றோம். நல்ல கூட்டம். அங்க வந்திருந்த அனைத்து ஆண்களுமே ‘அரைக்கால் சட்டை’ அணிந்திருந்தனர். ஒரு சிலர் மட்டும், தங்களின் உள்ளாடையின் மேலே துண்டு சுற்றியிருந்தனர். 

நாங்கள் இருவர், மூவர் கொண்ட சிறு சிறு குழுவாக பிரிந்து, ஜாலியாக பேசிக்கொண்டே அருவிகளை நோக்கிச் சென்றோம். நானும் என்னுடைய கஸின் ஒருவனும் நடந்துக்கொண்டிருந்தோம். 

அப்போது அருகிலிருந்த பாறைகளின் மேலிருந்து ஒரு குரல் வந்தது. 

‘சார்..சார்..’ 

திரும்பிப்பார்தோம். 

பாறையின் மேலிருந்த மூன்று ஆண்களில் ஒருத்தன் என்னைப் பார்த்துதான் கைகளை அசைத்துக்கொண்டிருந்தான். 

‘சார்..சார்..’ உரக்க கூப்பிட்டான். 

‘என்னங்க?’ நானும் உரக்க கத்தினேன். 

‘சார். உங்க டவுசர் என்ன விலை சார். ரொம்ப நல்லாயிருக்கு?’ 

எனக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. ஆதலால் ‘திருதிரு’ என்று முழித்தேன். 

அதற்குள் கூடவே வந்த கஸின் பதில் சொல்லிவிட்டான். 

‘நூத்தி அம்பது ரூபாய்ங்க’ 

‘என்னது நூத்தியைம்பது ரூவாயா? தென்காசியில முந்நூறு ரூவாய் சொல்றாங்க?’ 

‘இல்லீங்க. நூத்தி அம்பது ரூபாய்தாங்க.’ - இது என் கஸின். 

‘எந்த கடையில கிடைக்குதுங்க?’ 

‘திருச்சி சாரதாஸ்ல’ - தயக்கமே இல்லாமல் என் கஸின் சொன்னான். 

'ஓ’ என்றவன் பக்கத்திலிருந்தவர்களிடம் சொன்னான், ‘திருச்சி சாரதாஸ்ல கிடைக்குதாம்பா?’ 

இதற்குள் நான் சுத்தமாக வாயடைத்துப் போயிருந்தேன். என்னுடைய உடையை இன்னொருவன் பாராட்டி பேசியதால் அல்ல.  

அவன் ‘டவுசர்’ என்று குறிப்பிட்டது, நான் அமெரிக்காவில் கடைகடையா ஏறி இறங்கி, பார்த்து பார்த்து வாங்கிய ‘ஸ்விம் டிரங்க்’கைத்தான். அது ‘ஷார்ட்ஸ்’ மாதிரிதான் இருக்கும். ஆனால் உள்ளே எக்ஸ்டிரா லைனிங் வைத்திருப்பார்கள்.  

தண்ணீர் பட்டால், உடம்பில் ஒட்டாமல், உள்ளே இருக்கும் ‘ஷேப்’ களை காட்டாமல் இருக்கும். வெளியே இருக்கும் மெட்டீரியலும் ‘வாட்டர் ரெஸிஸ்டெண்டா’ இருக்கும். குளித்துவிட்டு வெளியே 
வந்த ஐந்து நிமிடத்திலே காய்ந்துவிடும். மேலும், கூடவே ‘ஜிப்’ வைத்த பாக்கெட்டா இருக்கிறமாதிரி பார்த்து வாங்கினேன். ஏனென்றால், உள்ளே ’ஸ்விம்மிங் பூலின்’ பிளாஸ்டிக் பாஸ்களை வைப்பதற்காக. அப்படி வைத்தால் அது விழாமல் இருக்கும். 

இவ்வாறு பார்த்து பார்த்து இருபத்தைந்து அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பு: ஆயிரத்து ஐநூறு ரூபாய்) கொடுத்து அமெரிக்காவில் ஸியர்ஸ் என்கிற செயின் ஸ்டொரில் வாங்கிய ‘ஸ்விம் டிரங்க்’கை குற்றாலத்தில் ‘டவுசரா’க மாற்றி, முந்நூறு ரூபாய்க்கு தென்காசியில கிடைப்பதாக சொன்னவனை திருத்தி, இல்லையில்லை, நூத்தியைம்பது ரூபாய்க்கு, தள்ளுபடிவிலையில் திருச்சி சாரதாஸில் கிடைப்பதாக ஆக்கி வைத்திருந்தான் என் கஸின்.  

பின் குறிப்பு: இதேமாதிரி டவுசர் வேணும் என்று திருச்சி சாரதாஸில் மூன்று இளைஞர்கள் வந்து நின்றால், நான் பொறுப்பு இல்லீங்க.

By
Sampath

Comments