சிறுகதை: சில்லரை இல்லீங்க



அது ஒரு சனிக்கிழமை காலை பதினொரு மணி...

லக்‌ஷணா தனது கிச்சனில் பிஸியாக இருந்தாள். அந்த அப்பார்ட்மெண்ட் காம்பவுண்டில் முதல் மாடியில் உள்ளது அவள் ஃபிளாட். 
  
எங்கே இன்னும் அவரைக் காணோம் என்று ஜன்னல் வழியாக பார்த்தாள். கரெக்டாக சொல்லிவைத்தது போல், அப்போதுதான் தனது பைக்கில் அப்பார்ட்மெண்ட் காம்பவுண்ட் உள்ளே நுழைந்த சந்தானம் அதை தனது ஃபிளாட் அருகினில் பார்க் செய்தான்.

சந்தானம்..லக்‌ஷணாவின் கணவன்.  

பைக்கை விட்டு இறங்கியவன் தனது ஹெல்மெட்டை கழற்றாமலேயே, பைக்கில் இரு பக்கத்திலும் தொங்கிக்கொண்டிருந்த இரண்டு காய்கறி பைகளை எடுத்துக்கொண்டு, படியேறி மேலே வந்தவன், ..தோ..இப்பொது அழைப்பு மணியை அழுத்திக்கொண்டிருக்கிறான்.

 லக்‌ஷணா போய் கதவை திறந்து ‘ஏங்க லேட்டு’ என்று கேட்டுவிட்டு அவன் கையில் இருந்த ஒரு காய்கறி பையை வாங்கிக்கொண்டு கிச்சனில் நுழைந்தாள். அவனும் அடுத்த பையுடன் அவளை பின் தொடர்ந்தான்.

 ‘கொஞ்சம் லேட்டாயிடுத்து. இன்னைக்குன்னு பார்த்து எவன்கிட்டேயும் சில்லரை இல்லைன்னா பார்த்துக்கோயேன்’

 ‘என்னங்க சொல்றீங்க’

 ‘தேங்காய் கடைகாரன்கிட்ட ஒரு தேங்காய் வாங்கிகிட்டு காசு கொடுத்தா, அவன் ரொம்ப நேரமா தன் காசுப்பையை தேடிவிட்டு, சில்லரை இல்லீங்க அய்யான்னு இளிக்கிறான்’
  
‘ம். நீங்க என்ன பண்ணீங்க?’
  
‘நான் என்ன அவ்வளவு சீக்கிறம் ஏமாந்திடுவேனா என்ன? சில்லறைக்கு பதிலா இன்னொரு சின்ன தேங்காயை சேர்த்து வாங்கிவிட்டு வந்திட்டேன்’
  
’ஹய்யா..! அப்புறம்’ என்று ஜாலியான தொனியில் லக்‌ஷணா சொன்னாள்.
  
ஆனால் நிஜமாலும் உள்நோக்கில் கிண்டல் தொனியில் தான் சொன்னாள். அவர்கள் இருவரும் காதல் கல்யாணம் பண்ணியவர்கள். இளம் வயது தான். ஆனால் சான்ஸ் கிடைத்தால் இரண்டு பேரும் ஒருத்தொருக்கொருத்தர் காலை வாரிவிட்டுக்கொண்டு கலாட்டா பண்ணிக்கொள்வார்கள். ஒவ்வொரு தடவையும் காய்கறி கடைக்கோ அல்லது வேற ஏதாவது கடைகளுக்கோ சந்தானம் தனியே சென்றால் ஏதாவது சொதப்பல் பண்ணிவிட்டுத்தான் வருவான். ஸோ, இந்த முறை என்ன பண்ணிவிட்டு வந்திருக்கானோ?

 அந்த கிண்டல் தொனியை கவனிக்காத சந்தானம் மேலும் உற்சாகத்துடன் பேச ஆரம்பித்தான்.
  
‘அப்புறம் கீரைகட்டுகாரனும் சில்லரை இல்லேன்னு சொன்னான்? விடுவேனா?’

 ‘இருங்க, சில்லரைக்கு பதிலா இரண்டு புதினா கட்டு, இரண்டு கொத்துமல்லி கட்டு வாங்கிட்டு வந்திட்டீங்களாக்கும்’
  
‘ஆமாம். அதெப்படி அவ்வளவு கரெக்டா கண்டுபிடிச்சே?’

 ‘என்னங்க. அதான் இந்த பையில இரண்டு புதினாவும், இரண்டு கொத்துமல்லியும் எக்ஸ்டிரா இருக்கே’

 ‘ஓ. அப்புறம் தக்காளி, கத்திரிக்காய் வாங்கும் போதும் இதே பிரச்சினைதான். நான்தான் கட் அண்ட் ரைட்டா, சில்லரைக்கு பதிலா எல்லாத்திலேயும் எக்ஸ்டிரா எக்ஸ்டிராவா வாங்கிகிட்டு வந்திட்டேன்’
  
‘ச்சே..! பெரிய ஆளுங்க நீங்க. நான் கூட உங்களை என்னவோன்னு நினைச்சிட்டேங்க. ஆனால் ஜெனரல் நாலெட்ஜ்ல நீங்க ஒரு பெரிய டெரர்ன்னு புரூவ் பன்ணீட்டீங்க’
  
ரொம்பவே உற்சாகமானான் சந்தானம்.
  
‘அதுமட்டுமில்லை. வர்ற வழியில அபபடியே பார்பர் ஷாப்புக்கும் போனேன். ரொம்ப ஷார்ட்டா முடி வெட்டிகிட்டுவாங்கன்னு முந்தாநேத்து நீ சொன்னே இல்லே’
  
‘ஆமாம். அப்புறம்?’

 ‘அதுக்குத்தான் போனேன். முடிவெட்டியதுக்கப்புறம் காசு கொடுத்தா சில்லறை இல்லேன்னு சொல்லிட்டான்’

 ‘அய்யய்யோ அப்ப்புறம் என்ன பண்ணீங்க?’
  
‘நான் விடுவேனா? சில்லறை இல்லேன்னா என்ன? அதுக்கு பதில் எனக்கு மொட்டை அடிச்சுவிடுன்னு ஸ்டிரிக்டா சொல்லி மொட்டை அடிச்சிக்கிட்டு தான் வந்திருக்கிறேன்’ என்று சந்தானம் தன் ஹெல்மெட்டை கழற்றினான்.
  
‘ஆட ஆண்டவா..!’ - தன் கணவனின் டெரர் ஜெனரல் நாலெட்ஜில் லக்‌ஷணா ஆடித்தான் போனாள்.

By Sampath

Comments