மினி தொடர் - வாக்கம் வடிவேலு - 1

என் பேரு வாக்கம் வடிவேலுங்க. 

 நான் ஒரு திருட்டுப்பயலுங்க. திருட்டுபயல்ன்னா என்னிய எளக்காரமா நினைச்சிடாதீங்க. இதுவும் ஒரு கஷ்டமான வேலைங்க. எவ்வளவு பிளான் பண்ணனும் தெரியுமா. உங்களை மாதிரி பகல் ஷிஃஃப்ட்டெல்லாம் எங்களுக்கு கிடையாதுங்க. எல்லாம் நைட் ஷிஃப்ட்தான்.  
எப்பவாச்சும்தான் பகல் ஷிஃப்ட்ல வேலை அமையும். ஆனா அதுவும் சனிக்கிழமை இல்ல ஞாயத்திக்கிழமையா போயிடும். டீவி முன்னாடி அமைதியா ஒக்காந்து ஒரு சீரியல் பார்க்க முடியாது. ஒரு சினிமா பார்க்க முடியாது. அதுக்குள்ள ஏதாவது வேலை வந்திடும்.

அதுவும் இந்த சாஃப்ட்வேர் கம்பெனிகள் எல்லாம் பெருகி, நைட்ல கால் செண்டர் வேலையெல்லாம் ஆரம்பிச்சதிலேர்ந்து எங்களுக்கும் நைட் ஷிஃப்ட் படு பிஸியா போயிகிட்டு இருக்குங்க.

அதுசரீ. திருட்டுபயலுக்கு இந்த ஃபேஸ்புக்ல என்ன வேலைன்னு கேட்கறீங்களா? ஏங்க? நாங்கல்லாம் ஃபேஸ்புக்குக்கு வரக்கூடாதா? எங்க கஷ்டத்தை சொல்லக்கூடாதா? அதுவும் எங்க கஷ்டத்தை கேட்டா நீங்க தாங்கமாட்டீங்க. எல்லாம் என் கூட இருக்கிற அப்பரெண்டிஸ்களாலதான் வர்றதுங்க. 

 ’நீயே ஒரு திருடன். இதுல உனக்கு அப்பரெண்டிஸ்ஸூங்க வேறயா’ன்னு நீங்க கேக்கிறது தெரியுது. என்னாங்க பண்றது? கூட்டாளிங்க இல்லாம இந்த தொழில பண்றது ரொம்ப சிரமம்ங்க. ஆரம்பத்துல நானும் சோலோவா இந்த தொழிலை செய்ஞ்சவந்தான். ஆனா கொஞ்சம் பிரச்சினையாகிப்போச்சு. அதனாலா இப்போல்லாம் கூட்டாளிங்க இல்லாம கிளம்பிறதில்லை.

 என்ன பிரச்சனைன்னு கேட்கறீங்களா?

ஒரு தடவை புறநகர்ல இருக்கிற ஒரு பழைய பங்களாவுல ஆட்டைய போடலாம்னு முடிவு பன்ணினேனுங்க. அந்த பங்களா ஓனருங்க பங்களாவை பூட்டிட்டு வேற ஊருக்கு போயி ரொம்ப நாள் ஆயிருக்கிறதா அரசல்புரசலா கேள்விபட்டதால நான் அங்க ஒருநாள் நைட்டு போயிட்டேனுங்க.

செவுத்தோரமா நல்லா இருட்டுறவரைக்கும் பதுங்கியிருந்தேங்க. ஒருபய என்னிய பார்க்கலையே. உண்மைய சொல்லனும்னா, ஒருபய கூட அந்த பங்களா பக்கமே திரும்பிபார்க்கலையே. வசதியாப்போச்சுடான்னு நினைச்சிக்கிட்டேன்.

ராத்திரி பண்ணெண்டு மணிக்கு, ஊரே அடங்கின பிறகு நான் மதில் ஏறிக்குதிச்சேங்க. பெரிய பங்களா. சுத்தி காம்பவுண்டு சுவரு. அதுக்குள்ள நல்லா அடர்த்தியா மரம் செடி கொடி. ஆஹா. ஆட்டையை போடறதுக்கு இது தாண்டா சரியான இடம்ன்னு நினைச்சிக்கிட்டேன். 

 முன்கதவு பூட்டை கம்பிவிட்டு திறக்கிறதுக்கு பதிலா வீட்டு மேலேயேறி உள்ள இறங்கிடலாம்னு முடிவு பண்ணிட்டேங்க. மொத்தம் மூணுமாடி இருக்கும் அந்த பங்களாவுக்கு. உள்ள போய் ரூம் ரூமா ஏதாவது கிடைக்குமான்னு தேடவேண்டியதுதான்.

 மேலேயேறி மொட்டைமாடிக்கு வந்துட்டேனுங்க. 

 அப்போ என்னுடைய செல்ஃபோன்ல் கால் வந்துச்சுங்க. சைலண்ட் மோடுல தான் இருந்துச்சு. எடுத்துப்பார்த்தேன். நம்ப செருப்புக்கடை செந்தில் கிட்டேயிருந்து கால். சரி, பங்களாவுக்குள்ள குதிச்சதற்கப்புறம் அவனை கால் பண்ணிக்கலாம்னு விட்டுட்டேன்.

 மொட்டை மாடியில ஒரு கதவு இருந்ததுங்க. ஆனா எவ்வளவு தான் கம்பி போட்டாலும் அதை திறக்கவேமுடியலை. வேற என்னதான் பண்றதுன்னு யோசிச்சேன். மொட்டைமாடியை ஒட்டியே ஓட்டுக்கூரை இருந்ததுங்க. பழைய மாடல் பங்களா போல. 

ஃபுல்லா மொட்டைமாடியாக்காம, கொஞ்சம் மொட்டைமாடித்தளம், கொஞ்சம் ஓட்டுக்கூரைன்னு இருந்தது. 

சரீ. ஓட்டை பிரிச்சி உள்ள குதிச்சிடவேண்டியதுதான்னு பிளான் பண்ணிட்டேங்க. அப்புற கீழ இறங்கி முன்வாசல் கதவை திறந்துக்கொண்டு வெளியே போயிடலாம்.

ஓட்டை பிரிச்சிட்டு உள்ளே குதிச்சிட்டேங்க.

 ஒரே கும்மிருட்டு. எது என்னதுன்னே தெரியலைங்க. நம்ப டார்ச் லைட்ட எடுத்து அடிச்சுப்பார்த்தேங்க. மங்கலா மினுக்மினுக்கென எறிஞ்சுது. அடடா பாட்டரியை மாத்த மறந்துட்டோமேன்னு எனக்குள்ளே வருத்தப்பட்டேங்க.

வீடே ரொம்ப கலைஞ்சு இருந்தது. சுவத்துல ஒரு பொண்ணு போட்டா இருந்தது. அழகாக சிரித்துக்கொண்டிருக்கிற மாதிரி இருந்தது. இருபத்திரெண்டு வயசிருக்கும் போல. இது அந்த பொண்ணோட ரூமாத்தான் இருக்கும்னு நினைச்சிக்கிட்டேன். பீரோவுல கண்டிப்பா ஏதாவது நகைங்க கிடைக்கும்னு நினைச்சிக்கிட்டேன்.

அப்போதான் செருப்புக்கடை செந்தில் கிட்டேயிருந்து திருப்பியும் கால் வந்துச்சு.

எரிச்சலோட எடுத்தேன்.

‘டேய் என்னடா? இந்த நேரத்துல ஃபோன் அடிக்கிறே? தொழில்ல இருப்பேன்னு தெரியுமில்லே?’

 ‘அண்ணே. நீங்க அந்த புறநகர் பங்களாவுக்கு ஆட்டைய போடப் போயிருக்கிறதா இப்போதான் கேள்விபட்டேன்’

 ‘ஆமாம்டா. அதுக்கு என்னா?’

 ‘அண்ணே. உள்ளே மட்டும் போயிடாதீங்கண்ணே. போன மாசம் அந்த வீட்டுல இருந்த பொண்ணு ஒண்ணு தற்கொலை பண்ணிகிச்சாம். அதனுடைய காதலுக்கு அவ அப்பா அம்மா ஒத்துக்கலையாம். அதனால அது ரொம்ப கோபமா அந்த வீட்டுல ஆவியா அலையுதாம்.”

எனக்கு தலை சுத்திச்சுங்க. அந்த பொண்ணோட போட்டோவை பார்த்தேன். இப்போ அது கோவமா இருக்கிற மாதிரி இருந்துச்சீங்க. என் உடம்பு உதற ஆரம்பிச்சிடுச்சி. ஒருவேளை பிரம்மையோ? நினைச்சிக்கிட்டிருக்கும் போதே டார்ச் லைட் ஆஃப் ஆயிடுச்சீங்க.

 தட தடன்னு கீழ நோக்கி ஓட ஆரம்பிச்சேங்க. பெரிய பங்களா. வழியும் தெரியலை ஒண்ணும் தெரியலை. செல்போன் வெளிச்சத்தை யூஸ் பண்ணலாம்னா அதுவும் பத்தலை. மேலும் அது எல்லா பொருளையும் பூதகாரமான நிழலோட காட்டியதால டபுள் பீதியாயிடுத்து.

சரீ. ஆபத்துக்கு பாவமில்லைன்னு ‘அவசர போலீஸ் 100 க்கு’ ஃபோன் அடிச்சு ‘அய்யா என்னிய உடனே வந்து கைது பண்ணி காப்பாத்துங்கன்னு’ கெஞ்சினேங்க.

அப்புறம் ஒருவழியா அவங்க வந்து என்னை கைது பண்ணதக்கப்புறம்தான் எனக்கு உயிரே வந்துச்சுங்க.

கைது பண்ணும்போது அந்த சப்-இன்ஸ்பெக்டர் கேட்டாரு, ‘ஏண்டா, வாண்டடா வந்து கைது ஆகிற? என்னா விஷயம்’ 

‘அய்யா சாமீ. இந்த பங்களாவுல இருந்த பொண்னு ஒன்ணு தற்கொலை பண்ணிகிச்சாம். அதனுடைய ஆவி இங்க கோபமா ஆலையுதாம். அது தெரியாமா நான் இங்க வந்து மாட்டிக்கிட்டேன். அதான் சாமீ பயத்துல உங்களையே கூப்பிட்டுவிட்டேன். நல்ல வேளை, நீங்க எல்லாம் வந்து என்னை காப்பாத்திட்டீங்க’ - நன்றி பெருக்குடன் நான்.

‘ஆவியா. அது இந்த பங்களா கிடையாதுடா. பக்கத்து பங்களாவுல தான் ஆவியிருக்கு. நீ அங்கேயிருந்து கூட்டிருந்தா நாங்க கூட வந்திருக்க மாட்டோம்’ என்றார் சப்-இன்ஸ்பெக்டர்.  

வேனில் ஏறும்பொது ‘வெளிய வந்ததும் இந்த செருப்புக்கடை செந்திலுக்கு இருக்கு’ ந்னு முனுமுனுத்துக்கொண்டே ஏறினேன். 

இப்படித்தாங்க. போலிஸ் ரெக்கர்டுல என் பேர் முதன்முதலா ஏறுச்சு. 


By

Sampath
© Sampath.com

Comments