சிறுகதை : கதை எழுதப்போறேங்க..!

ஏதாவது ஒரு கதை எழுதனும்னு ரொம்ப நாளா ஆசைங்க. கரெக்டா சொல்லனும்னா, ரொம்ப வருஷமாவே ஆசைன்னு சொல்லனும்ங்க.

ஆனா, எங்கேங்க நேரம் கெடைக்குது? நீங்களே சொல்லுங்க. காலைல ஏழரை மணிக்கு ஆபீஸ் கிளம்பனும். ஆபீஸ் போனா திரும்பிவர சாயந்திரம் ஆறு மணி ஆயிடுதுங்க. சாயந்திரம் வீட்டுக்கு வரும்போதே குழந்தைங்க ரெண்டும் ரெடியா இருப்பாங்க, என்கூட விளையாடறதுக்கு. விளையாடி முடிச்சதற்கப்புறம் அவங்களை படிக்க அனுப்பிட்டு வந்தா, டீவியில ஏதாவது புரோகிராம் ஓடும்ங்க. அப்படியே பார்க்க உட்கார்ந்தா கொஞ்சநேரத்துல டின்னர் ரெடின்னு வொய்·ப் கூப்பிடுவாங்க. டின்னருக்கு பிறகு கதை எழுதறதுக்கு எங்கே நேரம் இருக்குங்க?

சரி. ஆபீஸ் நேரத்தில் அப்படி இப்படின்னு கொஞ்ச நேரம் கிடைச்சா எழுதலாம்தான். ஆனா அதுக்கும் நேரம் கிடைக்கமாட்டேங்குதுங்க.

ஆபிஸ் நேரம் முழுக்க தினகரன்.காம், தினமலர்.காம், விகடன்.காம், குமுதம்.காம், அப்புறம் டைம் இருந்தா வேலைன்னு ஓடிப்போயிடுதுங்க. இதுல கதை எழுதறதை பத்தி எங்கே யோசிக்கிறது? ஒரு நாள் இதைப்பத்தி என் ·பிரண்டு சிவசுப்பு கிட்ட ·போன்ல பேசும்போது சொன்னேங்ங்க. நீ அமெரிக்காவுல இருக்கிறதுதான் இதுக்கெல்லாம் காரணம்டான்னு சொன்னான்.

என்னடா சொல்றேன்னு கேட்டேன்.

"என்னை பாரு, நான் தமிழ்நாட்டுல இருக்கிறதால, நீ சொன்ன அந்த நியூஸ் பேப்பர்ஸ், அப்புறம் ஆனந்தவிகடன், குமுதமெல்லாம் புஸ்தமாகவே வாங்கி படிச்சிடறேன். நீ அங்கே ஆன்லைன்ல படிக்கிறே, அதுவும் ஆபீஸ் நேரத்துல. என்னை எடுத்துக்கோ. ராத்திரி தூங்கும்போது, அழகா ஒரு புஸ்தகம், குமுதமோ இல்லை ஆனந்தவிகடனோ, எடுத்துக்கிட்டு படுக்கைக்கு போயிடுவேன். நிம்மதியா ஒரே மூச்சில் படிச்சிடுவேன். டைமை கரெக்டா யூஸ் பண்ணறேன். ஆனா உன்னை எடுத்துக்கோ. நீயும் நாலைஞ்சி வருஷமா கதை எழுதனும்னு ட்ரை பண்றே. அப்போ கேட்டா தினகரன்.காம், தினமலர்.காம்ல நம்ப ஊரு நியூஸ் படிக்கிறேன்னு சொல்லுவே. இப்போ கூட விகடன்.காம், குமுதம்.காமையும் சேர்த்துக்கிட்டே. இதெல்லாம் கொஞ்சம் குறைடா"ன்னு சொன்னான்.

"அதுவும் வாஸ்தவம்தாண்டா. நான் கொஞ்சகொஞ்சமா குறைச்சிக்கிறேன். சரி. உன் விஷயத்துக்கு வருவோம். கவிதை தொகுப்பு ஒண்ணு எழுதி வெளியிடனும்னு ரொம்ப நாளா சொல்லிகிட்டு இருந்தியே, இப்ப அது எவ்வளவு தூரத்துல இருக்கு?"ன்னு கேட்டேன்.

"எங்கடா நேரம் கிடைக்குது?"ன்னு அலுத்துக்கொண்டான்.

"என்னடா சொல்றே? உனக்குதான் இன்னும் கல்யாணம் கூட ஆகலியே. ஈவினிங்ல நிறைய நேரம் கிடைக்குமே"ன்னு கேட்டேன்.

"அப்படில்லாம் இல்லைடா. சாயந்திரம் வீட்டுக்கு வந்தா சமையல், டீவி சீரியல், கதை புஸ்தகம்ன்னு நேரம் போயிடுது"ன்னு சொன்னான்.

"சரி. ஆபீஸ் நேரத்துல என்ன, ·புல் பிஸியா"ன்னு கேட்டேன்.

"ஆமாம்டா. வேலை செய்ற நேரம் போக, பிபிஸி.காம், நியூயார்க்டைம்ஸ்.காம், வாஷிங்டன்போஸ்ட்.காம்ன்னு வேல்ர்டு நியூஸ் படிக்கிறதுக்கே நேரம் போயிடுது"ன்னு சொன்னான்.

சரியாபோச்சு. இனிமேல் இவன் கிட்ட இதைப்பத்தி அட்வைஸே கேட்கக்கூடாதுன்னு ·போன் தலையில அடிச்சு சத்தியம் சேஞ்சிகிட்டேங்க.

"கதை எழுதறது மேல உனக்கு அப்படி ஒரு ஆசைன்னா, நீ அந்த ஆசையை ஒரு முக்கிய நோக்கமா எடுத்துக்கனும். அந்த நோக்கத்தை நிறைவேத்த நீ கொஞ்சகொஞ்சமா முயற்சி பண்ணனும்". இப்படி சொன்னவன் பேரு சிங்காரம். இவனும் எனக்கொரு நண்பன்ங்க.

இங்க இவனை பத்தி கொஞ்சம் சொல்லனும். இவன் அப்பப்ப கொஞ்சம் உருப்படியா அட்வைஸ் பண்ணுவான்ங்க. ஆனா ஆள் கொஞ்சம் சீரியஸான அசாமி. பிரச்சினை என்னான்னா, தன்னை மாதிரி எல்லோரும் இருக்கனும்னு இவன் நினைக்கிறதுதான். இந்த உலகத்துல ஏண்டா எல்லாரும் ஒரு சீரியஸ்னஸ் இல்லாமல் இருக்காங்க என்று ரொம்ப சீரியஸா வருத்தப்படுவான்ங்க. அவன் சீரியஸா பேசும் போது யாரவது நடுவுல ஜோக் அடிச்சா கோவிச்சுக்குவான். ஆனா ரொம்ப நல்லவன்ங்க. சினிமாவுல கவுண்டமணி - செந்தில் ஜோக் சீன் வந்தா எல்லாரும் சிரிப்பாங்க. ஆனா இவன் மட்டும் செந்தில் இப்படி அடி வாங்குகிறாரேன்னு அழுவான். அதனாலே இவன் இருக்கும் போது டீவியில் கவுண்டமணி - செந்தில் ஜோக் சீன் வந்தா, நாங்க உடனே வேற சேனலுக்கு மாத்திடுவோம். மெகா அழுகை சீரியல்னா, இவன் மட்டும் ஆனந்தமா பார்ப்பான்ங்க. அதனாலே இவன் கிட்ட, முடிந்த அளவுக்கு நாங்க எல்லோரும் சீரியஸா மட்டுமே பேசவோம். சரி, இப்ப விட்ட இடத்துக்கு வருவோம்ங்க.

"அதை எப்பவோ நோக்கமா எடுத்துக்கிட்டேண்டா. ஆனா அதை நிறைவேத்த டைம் தான் கிடைக்கமாட்டேங்குது"ன்னு பதில் சொன்னேன்.

"டின்னருக்கு அப்புறம் கொஞ்சம் டைம் கிடைக்குமே. அப்ப உன் நோக்கத்தை நோக்கி நடை போடலாமே"ன்னு சொன்னான்.

"நானும் ட்ரை பண்ணி பார்த்தேண்டா. ஆனா நோக்கத்தை நோக்கி நடை போட்டேனோ இல்லியோ, முக்காவாசி நாள் தூக்கத்தை நோக்கி நடை போட்டதுதான் மிச்சம்"ன்னு சொன்னேன்.

சத்தியமா நான் சீரியஸாக தான் சொன்னேன்ங்க. ஆனா அதுக்கப்புறம் அவன் எனக்கு அட்வைஸ் பண்றதையே விட்டுட்டான்ங்க.

"கதை எழுதனும்னு ரொம்ப நாளா சொல்லிக்கிட்டு இருக்கியே, எதைப்பத்தி எழுதப்போறே?"ன்னு என்னை பார்த்து கேள்வி வந்துச்சுங்க. கேட்டவன் பேரு மயில்சாமிங்க.

"தெரியலைடா. எதைப்பத்தி எழுதறதுன்னு யோசிக்க உட்கார்ந்தா, மூளை அப்பத்தான் மக்கர் பண்ணுதுடா. ஒரு ஐடியாவும் கிடைக்கமாட்டேங்குதுடா"ன்னு சொன்னேன்.

"அப்ப ஒண்ணு பண்ணுடா. நீ கடைசியா பார்த்த நாலு சினிமாவிலிருந்து கொஞ்சம் சீன்களை கடன் வாங்கி உல்டா பண்ணி எழுதேன்"ன்னு சொன்னான்.

"நான் தமிழ் சினிமா பார்த்தே நாலு வருஷமாச்சேடா"ன்னு சொன்னான்.

"அடப்பாவி. உன்னை தமிழ் சினிமாவுல இருந்து யாரு கடன் வாங்க சொன்னா? இங்கிலீஷ் சினிமாவுல இருந்துதான் வாங்கனும். தமிழ் சினிமாக்காரங்களே அப்பப்ப அங்கேருந்துதான் வாங்கறாங்க. அதனாலெ நீயும் அதைச் செய்தா தப்பு இல்லை"ன்னு சொன்னான்.

நான் யோசிச்சுப் பார்த்தேங்க. உல்டா பண்ணறது அவ்வளவு நல்லதா எனக்குத் தோணவில்லைங்க. அதுவும் முதல் கதையையேவா.

"இல்லைடா. அட்லீஸ்ட் முதல் கதையாவது சொந்தமா எழுதினாத்தான் நல்லதுன்னு மனசு சொல்லுதுடா. இல்லைன்னா திருவிளையாடல் நாகேஷ் மாதிரி ஆயிடுச்சின்னா என்ன பண்ணறது. உன் கதையில் குற்றம் இருக்கிறதுன்னு யாராவது சொன்னா, அதெல்லாம் எனக்கு தெரியாது, நீங்க போய் ஸ்பீல் பெர்க் கிட்ட கேளுங்கன்னு சொன்னா அவ்வளவா நல்லாயிருக்காதுடா"ன்னு சொன்னேன்.

"அப்ப அக்கம் பக்கத்துல என்னென்ன நடந்திருக்கு, என்னென்ன நடக்குதுன்னு வாட்ச் பண்ணு. அதிலிருந்தாவது நிறைய கரு கிடைக்கும். இன்னைக்கு சினிமாவுல இருக்கிற சிறந்த கதாசிரியர்கள், டாப் டைரக்டர்ஸ்லாம் அப்படி கவனிக்கிறவங்கதான். அதனாலதான் அவங்களால விதவிதமா படமெடுக்க முடியுது"ன்னு சொன்னான்.

"எனக்கென்னமோ அவங்க எல்லாம் ரொம்ப லக்கின்னு தோணுது. ஏன்னா, அவங்களை சுத்தி நிறைய இன்டரெஸ்டிங்கா நடந்திருக்கு. அதனால எழுதறாங்க. ஆனா நான் எழுதற அளவுக்கு, உருப்படியா, என்னை சுத்தி ஒண்ணுமே இதுவரை நடக்கலைடா. எல்லாத்துக்கும் ஒரு கொடுப்பினை வேண்டும்டா"ன்னு அலுத்துக்கொண்டேன்.

"அட போடா. ஒண்ணு கூடவா நடக்கலை? நீ சரியா கவனிச்சிருக்கமாட்டே"ன்னு சொன்னான்.

எனக்கு ரோஷம் பொத்துக்கிட்டு வந்துடுச்சுங்க. " சரிதான் போடா. நான் எல்லாம் சரியா கவனிச்சிகிட்டுதான் வர்றேன். என்னை சுத்தி நடக்கிறதெல்லாம் சும்மா திரும்பித்திரும்பி போரடிக்கிற சமாச்சாரம்தான். என்னைக்காவது கொஞ்சம் சொல்லிக்கிற மாதிரி விஷயங்கள் நடந்திருக்கு. அவ்வளவுதான். ஆனா கதை எழுதற அளவுக்கு பெருசா எதுவும் நடந்ததில்லை"ன்னு பெருமூச்சு விட்டேன்.

"சரி. எனக்கு இப்ப டைம் இருக்கு. அந்த சொல்லிக்கிற மாதிரின்னு சொன்னியே, அந்த விஷயங்கள்ல ஒண்ணுரெண்டு சொல்லு கேட்போம்"ன்னு சொன்னான்.

நான் கொஞ்ச நேரம் யோசிச்சிட்டு, பிறகு சொல்ல ஆரம்பிச்சேன்ங்க.

"இப்ப நான் சொல்லப்போறது ரொம்ப பெரிய விஷயங்கள் கிடையாதுதான். இருந்தாலும் நீ கேட்கிறதால சொல்றேன்"ன்னு தொடங்கினேன்ங்க.

"டாய் சொல்றா. பெரிய விஷயமா இல்லையான்னு நான் முடிவு பண்ணிக்கிறேன்"ன்னு சொன்னான்.

"இப்ப நான் சொல்லப்போறது நாலு வருஷத்துக்கு முந்தி நான் மும்பையில இருக்கும்போது நடந்துச்சு. பக்கத்து ·பிளாட்டுல ஒரு யங் கப்பிள் இருந்தாங்க. புதுசா திருமணமானவங்க. அதுல அந்த ஹஸ்பண்டு வேலைக்கு போனப்புறம், சிலசமயம் அந்த வொய்·ப் பக்கத்துல இருக்கிற மார்கெட்டுக்கு காய்கறி வாங்க போவாங்க. ஒரு நாள் திடீர்ன்னு, பத்து கிலோமீட்டர் தள்ளி இருக்கிற இன்னொரு மார்கெட்டுக்கு போயிருக்காங்க. இது அந்த கணவருக்கு தெரியாது.

அவரும் தன்னுடைய புது கஸ்டமர் ஒருத்தரைப் பார்ப்பதற்கு, அதே மார்கெட் பக்கம் தன்னுடைய பைக்கில் வந்திருக்காரு. வந்துப்பார்த்தா மார்கெட் கிட்ட ஒரே ட்ரா·பிக் ஜாம். போலிஸ் வந்து எல்லாரையும் வேற ரூட்டுல மாத்தி அனுப்பிக்கிட்டு இருந்தாங்க. இவரு என்னன்னு பக்கத்துல இருந்த போலிஸ்காரர் கிட்ட விசாரிச்சாரு. ஆக்ஸிடெண்ட் சார். ஒரு பொம்பிளைக்கு ரொம்ப சீரியஸா அடிபட்டு ஆம்புலன்ஸ்ல ஏத்திக்கிட்டு இருக்கோம்ன்னு அந்த போலிஸ்காரர் பதில் சொல்லியிருக்கார். சரீன்னு அவரும் வேற ரூட்டுல திரும்பி கஸ்டமரை பார்க்க போயிட்டாரு.

அன்னைக்கு சாயந்திரம்தான் அவர் வீடு திரும்பியிருக்கிறார். வீட்டுல பார்த்தா அவருடைய மனைவியை காணவில்லை. முதல்ல தெரிஞ்சவங்க வீட்டுல எல்லாம் தேடிப்பார்த்துட்டு அப்புறம் பதறிப்போய் போலிஸ்ல கம்ப்ளெய்ன் பண்ணியிருக்கிறாரு. அப்புறம் பக்கத்துல இருக்கிற பெரிய பெரிய ஹாஸ்பிடல்கள் எல்லாம் விசாரிச்சிருக்கிறாரு. அப்பதான் ஒரு ஹாஸ்பிடல்ல அந்த மார்கெட் ஆக்ஸிடெண்ட் பத்தி சொல்லி, அதுல அடி பட்டதும் ஒரு இளம் பெண்தான்னு சொல்லியிருக்காங்க.

பதறிப்போய் அந்த பெண்ணைப் போய் பார்த்தபிறகுதான் தெரிஞ்சுது, அந்தப்பெண் வேற யாருமில்லை, அவரோட மனைவிதான்னு.

இதுல விதி எப்படி விளையாடிருக்கு பார்த்தியா? அவருக்கு கொஞ்ச தூரத்துலதான் அவருடைய மனைவி அடிபட்டு கிடந்திருக்காங்க. ஆனா அன்னைக்கு நைட்டுதான் அவருக்கு அதைப்பத்தி தெரிஞ்சிருக்கு"ன்னு சொல்லிட்டு மயில்சாமி முகத்தை பார்த்தேன். எதோ கலவரமாய் என்னை பார்கிற மாதிரி இருந்தது. கலவரமா இல்ல கோவமான்னு தெரியலைங்க.

நான் அடுத்த விஷயத்தை சொல்ல ஆரம்பித்தேன்.

"ரெண்டு வருஷத்துக்கு முந்தி நான் இந்தியா வந்திருந்தபோது என் அக்கா வீட்டுக்கு போயிருந்தேன். அப்ப என் அக்கா வீட்டு வேலைக்காரி சொன்னா. அவ வீட்டுக்கு பக்கத்துல ஒரு ஏழைக்குடும்பத்தோட வீட்டுல போலிஸ் ரெய்டு நடந்துச்சாம். ஏன்னா, அவங்க மகன் தன்னோடு கூடப்படிக்கிற ஒரு பொண்ணை லவ் பண்ணியிருக்கான். ஆனா அந்த பொண்ணோ அவன் மேல சுத்தமான நட்புதான் காட்டியிருக்கு. ஆனா இன்னொருத்தனை லவ் பண்ணியிருக்கு போல.

அதைப் புரிஞ்சிக்காம இந்தப் பையன் பைத்தியக்காரத்தனமா, அந்த பொண்ணு கிட்ட அவ லவ்வுக்கு ஹெல்ப் பண்ணறேன்னு சொல்லி, அந்த பொண்ணை கடத்திக்கிட்டு போய் காட்டுல வைச்சு ரொம்ப கஷ்டபடுத்திட்டான். அதான் போலிஸ் அவன் வீட்டுல ரெய்டு பண்ணிச்சாம்ன்னு சொன்னா.

அப்புறம் நான் ஊருக்கு திரும்பி வந்து விட்டேன். பிறகு ஒரு நாள் அக்காகிட்ட ·போன்ல பேசும் போது சொன்னா, அவன் அந்த காட்டுலேயே தற்கொலை பண்ணிகிட்டானாம். பாவம், சின்ன வயசுல நல்ல அமைதியான பையனாக தான் இருந்தானாம். அப்புறம் ஏன் ஒரு மனநோயாளி மாதிரி மாறினான்னு யாருக்கும் புரியலையாம். ஆனா அந்த பொண்ணோட அப்பா கொஞ்சம் செல்வாக்கு நிறைஞ்சவராம். அதனால் விஷயம் வெளியே வராம அமுக்கிட்டாராம்".

மயில்சாமி என் முகத்தையே வெறிச்சி பார்த்துக்கொண்டிருந்தான்.

"எனக்கு தெரிஞ்சி இந்த மாதிரி சின்ன சின்னதாய் கொஞ்சம் நடந்திருக்கு. ஆனா கதைன்னு எழுதற அளவுக்குன்னு எதுவும் அமையல"ன்னு சொன்னேன்.

மயில்சாமி மடேர் மடேர்ன்னு தலையில அடிச்சபடியே ஓடியே போயிட்டான்ங்க. ஏன்னுதான் தெரியலைங்க.

Comments