நகைச்சுவை : பாய்ஸ்
"பாய்ஸ் படம் பார்த்திட்டியா?"
"ம்ம்.. பார்த்தேன்பா. கலக்கிட்டாங்க இல்லே. என்னமா கார் சேஸ்லாம் இருக்கு"
"கார் சேஸா? என்னடா சொல்றே?"
"அதான்ப்பா ஹாலிவுட்டையே ஒரு கலக்கு கலக்குச்சே"
"டேய், அது பேட் பாய்ஸ்ங்கிற இங்கிலீஷ் டப்பிங் படம்டா. நான் சொல்றது நம்ப ஊரு ஷங்கர் எடுத்த பாய்ஸ் படம்"
"ஓ. அதுவா. பார்த்தேன். இப்பல்லாம் ஏண்டா ஷங்கர் நடிக்கிறதை விட்டுட்டாரு?"
"நடிக்கிறதை விட்டுட்டாரா? அவர் எப்படா நடிச்சாரு?"
"அதான்ப்பா. ஒரு தலை ராகத்துல அறிமுகமாகும் போதே ரொம்ப நல்லா நடிச்சிருந்தாரே?"
"ஐயோ, அது வேற ஷங்கர்டா"
"கரெக்டா சொன்னேபா. எனக்கு அப்பவே சந்தேகம்"
"என்ன சந்தேகம்?"
"இது ஒரு தலை ராகம் ஷங்கர் இல்லேன்னு"
"அப்பாடா. இப்பவாச்சும் உன் மூளை வேலை செய்யுதே. எப்படிடா கண்டுபிடிச்சே?"
"பின்ன என்னடா. கூட பாடிகிட்டு இருந்த ஹரிணியை நடிக்க வைக்கும்போதே நினைச்சேன்"
"கூட பாடிகிட்டு இருந்த ஹரிணியா? அடப்பாவி அந்த ஹரிணி இல்லடா இவங்க. இந்த ஹரிணி வேற. அந்த ஹரிணி வேற. இவங்க மும்பையிலிருந்து வந்த நடிகை"
"இவங்க மும்பை நடிகைன்னா, அப்ப அவரு ஷங்கர் மகாதேவன் இல்லையா"
"எவரு?"
"அதான்பா. டைரக்டரு"
"அடப்பாவி. அது வெறும் ஷங்கர்டா. அவர் தான் நம்ப எழுத்தாளர் சுஜாதாவை வசனம் எழுத வைச்சி இந்த படம் எடுத்திருக்காரு"
"என்னது வசனம் சுஜாதாவா? பரவாயில்லைபா. ஒரு நடிகையா இருந்து விட்டு இப்ப வசனம் எழுத வந்திருக்காங்களா?"
"டேய். அது நடிகை சுஜாதாடா. நான் சொல்றது எழுத்தாளர் சுஜாதாடா. ரொம்ப காலமாவே சினிமாவுக்கு கதை வசனம் எழுதிகிட்டு வர்றாரு"
"ரொம்ப காலமாவா?"
"எனக்கு தெரிஞ்சு, ரொம்ப நாளைக்கு முன்ன வந்த படம், 'விக்ரமுக்கு' அவர் தான் வசனம் எழுதினார்"
"என்னது விக்ரமுக்கு அவர் கதை வசனம் எழுதியிருக்கிறாரா? எந்த படத்துல. 'சேது'லியா"
"டேய் நான் சொல்றது விக்ரம் படம்டா. கமல் தயாரிச்ச படம்டா. நீ சொல்றது சேதுடா. பாலா எடுத்த படம்டா"
"எந்த பாலா? மதுபாலாவா?"
"இது வெறும் பாலாடா. நான் சொல்றது பாலாங்கிற டைரக்டர். நீ சொல்றது மதுபாலாங்கிற நடிகை"
"யாரு, இந்த ஜென்டில்மேன் படத்துல நடிச்சாங்களே, அவங்களா?"
"அப்பாடி இது ஒண்ணாவது கரெக்டா சொன்னியே. அவங்க தான்"
"ஜென்டில்மேனோட டைரக்டர் யாரு. ஷங்கர் தானே?"
"அப்பாடி இதுவும் கரெக்டுடா"
"ஆனா ஏண்டா இப்பல்லாம் அவரு நடிக்கிறதை விட்டுட்டாரு? ஒரு தலை ராகத்துல நல்லா நடிச்சிருந்தாரே"
"ஆண்டவா"
(மயக்கம் போட்டு விழுதல்)
Comments
Post a Comment