சிறுகதை: தகுதி


எம்.எல்.ஏ பாண்டுரங்கன் தான் புதிதாக ஆரம்பித்த பொறியியல் கல்லூரியில், தன்னுடைய அலுவலகத்தில் உட்கார்ந்து கொண்டு இருந்தார்.

தன் கையில் இருந்த பயோடேட்டாவையும், தன் எதிரில் அமர்ந்திருக்கும் அந்த பயோடேட்டாவுக்கு சொந்தக்காரரையும் மாறிமாறி பார்த்தார். பிரின்சிபால் வேலைக்கு நேர்முகத் தேர்வு நடத்திக்கொண்டிருக்கிறார். 

"நீங்க இதுக்கு முன்னாடி வெறும் புரபஸராகத்தான் இருந்திருக்கீங்க. பிரின்சிபாலா இருந்த அனுபவம் உங்களுக்கு இல்லைன்னு போட்டிருக்கீங்களே?" என்றார்.

"ஆமாம் சார். எனக்கு பிரின்சிபாலா இருந்த அனுபவம் இல்லைதான். ஆனால் இருபத்தைந்து வருஷமா மற்ற கல்லூரிகள்ல புரபஸராகவும் ஹெச்.ஓ.டி யாகவும் இருந்திருக்கிறேன். அந்த தகுதியை வெச்சுதான் இந்த பிரின்சிபால் வேலைக்கு அப்ளை பண்ணினேன். நீங்க வாய்ப்பு கொடுத்தா கண்டிப்பா என்னுடைய வேலையை சிறப்பாக செய்வேன்" என்றார் எதிரிலிருந்தவர்.

"தோ பாருங்க சார். எனக்கு தகுதிதான் முக்கியம். பல கோடி பொட்டு இந்த காலேஜ் பிஸினெஸ்ஸில் இறங்கியிருக்கிறேன். லாபம் பார்க்கனும்னா எனக்கு தகுதியானவங்க தான் தேவை. அதனால எனக்கு ஏற்கெனெவே பிரின்சிபாலா இருந்தவங்கதான் வேணும். நீங்க இப்போ போகலாம்" என்று கட் அண்ட் ரைட்டாக சொல்லி வந்தவரை அனுப்பினார் எம்.எல்.ஏ.

அப்போது அவரின் செல்·போன் ரிங்கியது.

அவரது கட்சி தலைவர் கூப்பிடுகிறார்.

"அண்ணே வணக்கம்" என்றார் பாண்டுரங்கன்.

"என்ன பாண்டு, என் கிட்ட பேசனும்னு நேத்து என் ஆபீஸ¤க்கு வந்திருந்தியாமே" என்றார் தலைவர்.

"ஆமாம்ணே. காலியாக இருக்கிற ஹெல்த் மினிஸ்டர் போஸ்டை நீங்க எனக்கு தரனும்னு கேட்கனும்னு தாண்ணே வந்தேன்"

"ம்..ம்...ஹெல்த் மினிஸ்டர் போஸ்டா! அது சம்பந்தமா என்ன தகுதிப்பா இருக்கு உன்கிட்ட?"

"என்னண்ணே! மினிஸ்டர் போஸ்டுக்கெல்லாம் போய் தகுதி அது இதுன்னு கேட்கறீங்க? அண்ணே நான் படிச்சது வெறும் நாலாங் கிளாஸ்னாலும், நீங்க என்ன வேலை சொன்னாலும் உங்க வீட்டு நாய் போல நான் அதை செய்வேண்ணே. அந்த தகுதி போதாதாண்ணே"

By
Sampath

Comments