சிறுகதை: ஒரு நிமிட கதை - வரதட்சிணை ஒழிப்பு


"அப்புறம் பொண்ணுக்கு வரதட்சிணையா எவ்வளவு போடுவீங்க?" என்று கேட்டார் மாப்பிள்ளையின் தாய்.


"ஆங். அதுவாங்க! ஏதோ எங்க சக்திக்கு ஏற்ப இருபத்தைந்து பவுன் போடறோம்" என்று தலையை சொறிந்தார் பெண்ணின் அப்பா. 

 "தோ பாருங்க! இப்போல்லாம் இருபத்தைந்து பவுன்ங்கிறது ரொம்ப கம்மி. சாதாரண டெம்பரெரி வேலையில இருக்கிற மாப்பிள்ளைங்களுக்கே இருபது இருபத்தைந்து போட்டு கல்யாணம் பண்ணுறாங்க. நீங்க என்னடான்னா கவர்மெண்ட்ல பெர்மனெண்ட் வேலையில இருக்கிற என் பையனுக்குப் போய் அவ்வளவு கம்மியாத்தான் போடுவேன்னு சொல்லறீங்களே?"


"தயவு செய்தி நீங்க தப்பா எடுத்துக்க கூடாது. எங்களால அவ்வளவுதான் போட முடியும்"


"நீங்க இன்னும் என் பையனை பத்தி ஃபுல்லா தெரிஞ்சிக்கலைன்னு நினைக்கிறேன். அவனை கல்யாணம் பண்ணினால் உங்க பொண்ணுக்கு எப்படி பட்ட நல்ல வாழ்க்கை அமையும்னும் புரிஞ்சிக்கலை. பேசாம ஒண்ணு பண்ணுங்க. நீங்களே ஒரு நாளைக்கு எம்பையன் வரதன் வேலை செய்யுற ஆபீஸூக்கு போங்க. அங்க 'வரதட்சிணை ஒழிப்பு பிரிவு ஆபீஸர் வரதனை' பற்றி இருக்கிறவங்க கிட்ட எல்லாம் கேளுங்க. அப்போ தெரியும் எங்க பையன் வரதனுக்கு இருக்கிற செல்வாக்கை பத்தி. அதுக்கப்புறம் சொல்லுங்க உங்களால எவ்வளவு போட முடியும்னு"

By
Sampath

Comments